புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களுக்கு வெளியே நின்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்ஒரு பகுதியாக, வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் புரட்டாசி மாதம் பிறந்தது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விசேஷமான நாளாக கருதப்பட்டு வருகிறது. எனவே, ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாககாணப்படுவது வழக்கம். பக்தர்கள்தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் நேற்று அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தன.
பக்தர்கள் வருகை
இந்தச் சூழலில், புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்கீழ் இயங்கும் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு நேற்று காலை 6 மணி முதலே ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினார். கோயிலின் வாயில் கதவு பூட்டப்பட்டிருந்தது. கோயில் முன்பு பேரிகாட் வைத்து தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. எனவே, பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி கும்பிட்டுச் சென்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு நேற்றுகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி கும்பிட வந்தனர். தரிசனத்துக்கு அனுமதியில்லாத காரணத்தால் கோயிலுக்கு முன்பு நின்று சுவாமி கும்பிட்டனர். இவ்வாறு, சென்னை முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களுக்கு வெளியே நின்று நேற்று ஏராளமானபக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.