தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2019-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்கப்படவில்லை. அக்கட்சி வேட்பாளர்கள், ஒவ்வொரு வார்டிலும் வெவ்வேறு சின்னங்களில்போட்டியிடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அமமுகவுக்கு பொது சின்னமாக குக்கர் சின்னத்தை வழங்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலர் டிடிவி.தினகரன், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியதேர்தல் ஆணையத்தால் அமமுக கட்சிக்கு பொது சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும், அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் சின்னம் ஒதுக்குமாறு அக்கட்சி கோரியுள்ளது. இதை ஏற்று, அமமுக கட்சிக்கு குக்கர்சின்னம் ஒதுக்குமாறு, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.