துணை ராணுவப் படையின் தலைமை இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சஷாஸ்த்ர சீமா பல் (எல்லை ஆயுதப்படை) என்பது துணை ராணுவப் படைகளில் ஒன்றாகும். இதன் தலைமை இயக்குநராக பெண் ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் (58) நியமிக்கப்பட்டுள்ளார். இந்தி யாவில் துணை ராணுவப் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1980-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஐபிஎஸ் அதி காரிகளில் தமிழக பிரிவைச் சேர்ந் தவர் அர்ச்சனா ராமசுந்தரம். படிப் படியாக பதவி உயர்வு பெற்ற இவர், தமிழக காவல் துறையில் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு பணிக்கு மாற்றலாகிச் சென் றார். சிபிஐ கூடுதல் இயக்குநராக மத்திய அரசு இவரை நியமித்தது. தமிழக அரசு விடுவிக்கும் முன்னரே மத்திய அரசுப் பணியில் சேர்ந்ததால், இவரது பணி நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. பின்னர், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குநராக இவரை மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில், துணை ராணுவப் படைகளில் ஒன்றான சஷாஸ்த்ர சீமா பல் என்ற எல்லை ஆயுதப் படையின் தலைமை இயக்குநராக மத்திய அரசு இவரை நியமித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
துணை ராணுவப் படைகளில் ஒன்றான சஷாஸ்த்ர சீமா பல், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளை ஒட்டிய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. துணை ராணுவப் படையின் தலைமை இயக்குநராக பொறுப்பேற்கும் முதல் பெண் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் 2017 செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற உள்ளார். இவரது கணவர் ராமசுந்தரம் தமிழகத்தில் முக்கிய துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.