அரசின் திட்டங்களைச் செயல்படுத்த அனைத்துத் தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும் எனத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்தில் இருந்து கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் சாலை அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளுக்காக 20 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டி அனிமூர் பஞ்சாயத்து தலைவர் தாமரைச் செல்வன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (செப். 18) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் அரசு பிளீடர் பி.முத்துகுமார் ஆஜராகி, அரசின் திட்டங்களை அமல்படுத்தும்போது அனைத்துத் தொகுதிகளுக்கும் சமமான நிதிப் பங்கீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என உத்தரவாதம் அளித்ததுடன், இதன் மூலம் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாகக் குறை இருக்காது எனவும் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்துத் தொகுதிகளிலும் மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டப்படாது என நம்பிக்கை தெரிவித்து, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.