புதுவையில் பாம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டுமென பாம்புக்கடி குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கில் ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
பாம்புக்கடி குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு இணையவழி கருத்தரங்கினை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (செப்.18) தொடங்கி வைத்தார்.
இதில் அவர் பேசியதாவது:
‘‘பாம்புக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள், எச்சரிக்கை நடவடிக்கைகள், அதற்கான மருத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, பாம்பு கடித்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது விஷம் தலைக்கு ஏறாமல் இருக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ளவர்களைப் பாம்புக் கடியிலிருந்து காப்பாற்றும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அவர்களது வாழ்வியல் நிலைமை மற்றும் வாழ்வியல் முறைகளை மேம்படுத்த வேண்டும் .பாதுகாப்பு, விழிப்புணர்வு, மருத்துவம் ஆகியவை இணைந்து செயல்படும்போது பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை நாம் பெரிதும் தடுக்க முடியும்’’.
இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.