ஆர்.என்.ரவி: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்

செய்திப்பிரிவு

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான, ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்தார். பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து விடைபெற்றுச் சென்றார்.

இதைத் தொடர்ந்து, புதிய ஆளுநரான ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர். விமான நிலைய வளாகத்திலேயே ஆளுநருடன் முதல்வர் சிறிது நேரம் உரையாடினார்.

இந்நிலையில், புதிய ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று (செப்.18) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இதில், தமிழகத்தின் 25-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் மு.அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்குப் புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதேபோன்று, அமைச்சர்களும் புத்தகங்கள், சால்வைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT