நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிப்படை பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன், திருவொற்றியூர் குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகத்தை நேற்று ஆய்வு செய்தார். பின்னர்,காசிமேட்டில் பல்வேறு மீனவர்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
மீனவர்கள் கோரிக்கை
அப்போது, மானிய விலை டீசல் அளவை உயர்த்த வேண்டும், மீன்பிடி வலைக்கு ஜிஎஸ்டி கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மீனவர் சங்க பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
பின்னர், அமைச்சர் எல்.முருகன்பேசியதாவது:
மத்திய மீன்வளம் மற்றும் மீன்வள மேம்பாட்டு நிதியம் பங்களிப்பு,தமிழக அரசின் நிதியுதவியுடன் ரூ.200 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூர் குப்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்துறைமுகம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற முடியும்.
சென்னை உட்பட நாடு முழுவதும் 5 மீன்பிடித் துறைமுகங்கள் சர்வதேச தரத்துக்கு இணையாகநவீனப்படுத்தப்பட உள்ளன.மீனவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இத்துறைமுகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.
மீன்பிடி மசோதா
மத்திய அரசு கொண்டு வரஉள்ள புதிய மீன்பிடி மசோதாகுறித்து அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளை கேட்ட பிறகுதான் இச்சட்டம் உருவாக்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கடன் அட்டை, மீனவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக,ரூ.296 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்தமிழகத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வரு கின்றன.
இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ரவீந்திரன், தமிழக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கூடுதல் செயலாளர் ஜவஹர், மீன்வளத் துறை இயக்குநர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.