தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட விஷயங்களுக்கு ஸ்டார் மதிப்பீடு பெறுவது கட்டாயமாக்கப் படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தை கடந்த 2014-ம்ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். அந்தத் திட்டத்தின் கீழ் பெரும்பாலான பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது.
இத்திட்டத்தில், கழிவு நீரை சுத்தப்படுத்தி மறுசுழற்சிக்குப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் விஷயங்களைக் கையாளுதல் போன்றவை பிரதான நோக்கங்களாக இருக்கும். இதன் அடிப்படையில் ஸ்டார் மதிப்பீடு கட்டாயமாக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, “தூய்மை இந்தியா 2.0 திட்டம் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. இத்திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு, திறந்த வெளியில் கழிப்பிடம் இல்லாத சமூகம், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்கள், அவற்றின் மீது மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பொறுத்து 1, 3, 5 மற்றும் 7 என்ற விகிதத்தில் ஸ்டார் மதிப்பீடு அளிக்கப்படவுள்ளது. மாநகராட்சி, நகராட்சி என எந்த உள்ளாட்சி அமைப்பாக இருந்தாலும், இந்த ஸ்டார் மதிப்பீட்டை பெற வேண்டியது அவசியமாக்கப்படவுள்ளது. ஸ்டார் மதிப்பீடு பெற்றால் மட்டுமே சில திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியைப் பெற முடியும் என்ற வகையில் மாறுதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. பணிகளை தனிக்குழுவினர் ஆய்வு செய்து மதிப்பீடு செய்வார்கள். இதற்காக கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மறுசுழற்சி மையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றனர்.
மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா கூறும்போது, “தூய்மை இந்தியா 2.0 திட்டத்துக்கான வழிகாட்டி வரைவு மத்திய அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது. தொடர்ந்து கருத்துகள் பெறப்பட்டு, அதற்கு பிறகே திட்டம் நடைமுறைக்கு வரும்” என்றார்.