தமிழகம்

பேரவைத் தலைவர் அப்பாவு அளித்த 1 லட்சம் விதைகள் மூலம் பனை மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

பேரவைத் தலைவர் மு.அப்பாவு அளித்த ஒரு லட்சம் பனை விதைகள் மூலம் பனை மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு தற்போதுள்ள பனை மரங்களை பாதுகாப்பதுடன், கூடுதலாக பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடப்பாண்டு 30 மாவட்டங்களில், 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் மரக்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும் என்று கடந்த 2021-22ம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தனிநிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த பனை மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஒரு லட்சம் பனை விதைகளை வழங்குவதாக உறுதியளித்தார். அதன்படி, பேரவைத் தலைவரால் அளிக்கப்பட்ட பனை விதைகளை ஏரிக்கரை, சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் நடவு செய்யும் பனை மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செயலர் சி.சமயமூர்த்தி, வேளாண் இயக்குனர் ஏ.அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தாதேவி, வேளாண் துறை கூடுதல் இயக்குநர் ஸ்வரன்குமார் ஜடாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT