தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையேயான 3-வது ரயில் பாதை பணி நிறைவு பெற்றதை ஒட்டி நேற்று தாம்பரத்தில் ரயில் இன்ஜின் முன்பாக பூஜைகள் நடத்தப்பட்டு சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டது. படம் : எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே 3-வது புதிய பாதையில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை

செய்திப்பிரிவு

தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே 3-வது புதிய ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, அப்பாதையில் நேற்று மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடம் வழியாக ரயில்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கிமீ தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. ரூ.256 கோடியில் 3 கட்டமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் - கூடுவாஞ்சேரி வரை புதிய பாதை பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், கூடுவாஞ்சேரி - தாம்பரம் இடையே 3-வது புதிய பாதை பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த புதிய பாதையில் டீசல் ரயில் இன்ஜின் நேற்று இயக்கி சோதனை ஓட்டம்நடத்தப்பட்டது. காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரையில் பல்வேறு கட்டமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டன. அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் டீசல் இன்ஜின் இயக்கி, ரயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பாதுகாப்பு ஆணையர்

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3-வது புதிய பாதையில் ஏற்கெனவே, கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு வரையில் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்களின் சேவைதொடங்கியுள்ளது.

தற்போது பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையேயான புதிய பாதையில் டீசல்இன்ஜின் இயக்கி சோதனை நடத்தினோம். ரயில் தண்டவாளங்களின் தரம், பாதையில் உரசல், ரயில் நிலைய நடைமேடைகளில் எவ்வித பாதிப்பு இல்லாமல் ரயில் இயக்கம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினோம்.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கொண்ட குழுவினர் ஓரிரு வாரங்களில் வந்து ஆய்வு செய்து, ஒப்புதல் அளிப்பார்கள். அதன்பிறகு, இந்த தடத்தில் ரயில் சேவையைத் தொடங்குவோம். அடுத்த மாதம் இந்த தடத்தில் ரயில் சேவை தொடங்கும்போது இந்த தடத்தில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT