தமிழகத்தில் மின்சார நிலைமை குறித்த புகார்களுக்கு தமிழக முதல்வர் பதிலளிப்பாரா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வியாழக்கிழமை வெளி யிட்ட கேள்வி, பதில் அறிக்கை வருமாறு: சென்னையில் புதிய நெடுஞ்சாலைத் துறை மேம்பாலங் களை முதல்வர் திறந்து வைத்த செய்தி வந்துள்ளது. ஆனால், இந்த பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும், முதல்வர் நேரம் கொடுக்காததால் மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற் பட்டது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு இரண்டாண்டுகளுக்குப் பின், மின் தொடர மைப்புக் கழக ஓய்வு பெற்ற இயக்குநர் அக்ஷய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவியேற்ற இரண்டாம் நாளே அவரது நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டுமென்று, உயர் நீதிமன்றத்தில் தொழில் துறையி னர் முறையிட்டுள்ளனர். மின்சார நிலவரம் குறித்த புகார்களுக்கு அமைச்சர்களைக் கொண்டு முதல்வர் பதில் சொல்ல வைத்தி ருக்கிறார்.
டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில், திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களால் இப்போது மின் உற்பத்தி அதிகமாகியுள்ளது என்று கூறியிருந்தார். முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எத்தனை மின் திட்டங்கள் தொடங்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கத் தயாரா என்று நான் கேட்டேன். அதற்கு இதுவரை பதில் இல்லை.
பிற மாநிலங்களில் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் 3,300 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ததாகக் கூறியுள்ளனர். என்ன விலைக்கு வாங்கப்பட்டது? 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடக் காரணம் என்ன? இதற்கு பதிலளிப்பார்களா? இரவு நேரத்தில் மின் வெட்டு அமலாவதற்கு என்ன காரணம்?
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, குற்றப்பின்னணி கொண்ட எம்.பி.க்களின் வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வோம் என்று கூறியுள்ளார். ஆனால் ஒரு முதல்வர் மீதான வழக்கு 17 ஆண்டுகளாக வாய்தாவுக்குள் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறதே, அதற்கு எப்போது தீர்வு ஏற்படும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.