தமிழகம்

சென்னையில் வரும் 26-ம் தேதி பிரச்சாரம் தொடங்குகிறார் கருணாநிதி: அன்பழகன், கனிமொழி, குஷ்பு சுற்றுப்பயணமும் அறிவிப்பு

செய்திப்பிரிவு

திமுக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்தை வரும் 26ம் தேதி சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். வரும் 30ம் தேதி முதல் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனும் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

திமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு:

திமுக தலைவர் கருணாநிதி வரும் 26ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை சேப்பாக்கம் நெடுஞ்செழியன் நகரில் மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தென்சென்னை தொகுதி வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், வடசென்னை தொகுதி வேட்பாளர் ஆர்.கிரிராஜன் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், வரும் 30ம் தேதி அரக்கோணம் தொகுதி அம்மையார்குப்பத்தில் பிரச்சாரம் தொடங்கி, ஏப்ரல்11ம் தேதி கன்னியாகுமரி தொகுதி தக்கலையில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் கனிமொழி ஏப்ரல் 5ம் தேதி தென்சென்னையில் பிரச்சாரம் துவங்கி, ஏப்ரல் 22ம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு செய்கிறார்.

நடிகர் வாகை சந்திரசேகர் ஏப்ரல் 1ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் தொடங்கி, 22ம் தேதி பெரும்புதூரில் முடிக்கிறார். நடிகை குஷ்பு சுந்தர் ஏப்ரல் 5ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் துவங்கி, 22ம் தேதி திருவள்ளூரில் நிறைவு செய்கிறார்.

இவ்வாறு திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT