காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ளது பழையசீவரம் கிராமம். இந்த கிராமத்தில் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய ‘பிரம்ம சிரச்சேதக மூர்த்தி’ என்னும் சிவபெருமான் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியது:
பழையசீவரம் கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாழடைந்த பழமையான கந்தபாலீஸ்வரர் கோயில் இடத்தில் மரம், செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். அப்போது அங்கு சுமார் 6 அடி உயரமுள்ள பெரிய சிலை ஒன்றை கண்டறிந்தனர். இந்தச் சிலையை ஆய்வு செய்தபோது இது சிவபெருமானின் பிரம்ம சிரச்சேதக மூர்த்தி சிலை என்று தெரிய வந்தது.
இந்தச் சிலை 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். 6 அடி உயரம், 2 அடி அகலம் கொண்டுநான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இந்தச் சிலை உள்ளது. தலை, முகம், மார்பு ஆகிய பகுதிகள் சிதைந்த நிலையில் உள்ளன. தலையில் சிதைந்த நிலையில் கிரீடமும், இரு காதுகளில் பத்ர குண்டலமும் உள்ளன.
இது சிவனின் 64 அவதாரங்களில் 54-வது அவதாரமான ‘பிரம்ம சிரச்சேதக மூர்த்தி’ ஆகும். சிவபெருமான், பிரம்மதேவன் ஆகிய இருவருக்கும் ஐந்து தலைகள் காணப்பட்டன. அனைவரும் சிவபெருமானுக்கு முக்கியத்துவம் அளிப்பது, பிரம்ம தேவனுக்கு பெரும் குறையாகத் தோன்றியது. படைப்புத் தொழிலை செய்வதால் தானே உயர்ந்தவன் என்கிற கர்வம் பிரம்மதேவனுக்கு ஏற்பட்டது. இதனால் பிரம்மதேவன் கர்வத்துடன் செயல்பட ஆரம்பித்தார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
பிரம்மதேவனின் கர்வத்தை அடக்கவும், குழப்பத்தை தீர்க்கவும் பிரம்மதேவனின் ஒரு தலையைதன்னுடைய கரத்தால் சிவபெருமான் கிள்ளி எரிந்தார்.
பிரம்மதேவனின் தலையை குறைத்ததால் ‘பிரம்ம சிரச்சேதக மூர்த்தி’ என்று சிவபெருமான் அழைக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் இதுவரை சிவபெருமானின் இந்த அவதாரம் சிலையாக கண்டறியப்படவில்லை. எனவே இது மிக மிக அரியதாகும். இந்த தகவலை தமிழ்நாடுதொல்லியல் துறை சென்னை அருங்காட்சியக காப்பாட்சியர் சுந்தர்ராஜனும் உறுதி செய்துள்ளார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலுக்கு செல்வதற்கு கூட வழி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.