சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் நேற்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த தின விழாவில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று, உரையாற்றினார். 
தமிழகம்

அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தகவல்

செய்திப்பிரிவு

அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தின விழாவில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் நேற்று மாலை பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் பிறந்தநாள் விழா கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமை வகித்தார். பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் செங்குட்டுவன் மற்றும் மாநில செயலாளர்கள் திவாகர், பாஸ்கர், மோட்சம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று கேக் வெட்டி வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்.

பின் அண்ணாமலை பேசும்போது, ‘‘பாஜக வழக்கறிஞர் பிரிவைப் பார்க்கும்போது புது தைரியம் வந்து இருக்கிறது. உள்துறை, உள்கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி வகுத்துள்ள திட்டங்களால் தமிழக மக்கள் வெகுவாகப் பலன் அடைந்து வருகின்றனர். பிரதமர் தரும் நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதில் அறிவுசார்ந்த இந்த வழக்கறிஞர் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியம்’’ என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘உண்மையான சமூக நீதிக்கு வித்திட்டவர் பிரதமர் நரேந்திர மோடிதான். அதிமுக, பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. பாமகவினர், அவர்களின் கட்சி வளர்ச்சிக்காக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்போம். பாஜக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” என்றார்.

சென்னை தியாகராய நகர் வாணி மகாலில் தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு சார்பில் அதன் தலைவர் ஷெல்வி தாமோதரன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக பாஜக சார்பில் சென்னையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பெசன்ட் நகர் கடற்கரையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மாநில மீனவர் அணி சார்பில் பழைய வண்ணாரப்பேட்டையில் மக்களுக்கு 710 கிலோ மீன்கள் வழங்கப்பட்டன. மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடசென்னை ரெட்டேரி பகுதியில் நடந்த பால்குட ஊர்வலத்தை எல்.முருகன் தொடங்கி வைத்தார். மோடி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பாஜக கிளைகள் அனைத்திலும் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT