ராமேசுவரத்தில் மணலில் புதைந்து கிடக்கும் ராமநாத சுவாமி கோயிலுக்கு தொடர்புடைய தீர்த்தக் குளங்களை கண்டறிந்து புனரமைக்கும் பணிகளை கடந்த 8 ஆண்டுகளாக விவேகானந்த கேந்திரம் செய்து வருகிறது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தொடர்புடைய தீர்த்தங்களில் தீர்த்தமாடுவதன் மூலம் முன்னோர்களின் நல்லாசி, தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிட்டும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் அக்னி தீர்த்தக் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் குவிவர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தொடர்புடைய 108 புனித தீர்த்தக் குளங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ளன. இவற்றில் ராமநாதசுவாமி கோயிலின் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களும் அக்னி தீர்த்தக் கடற்கரையும் அடங்கும். முன்பெல்லாம், ராமேசுவரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் ஒரு மாத காலம் தங்கியிருந்து 108 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடி விட்டுச் செல்வர். கடந்த 50 ஆண்டுகளில் இந்த 108 தீர்த்தங்களில் பல தீர்த்தங்கள் தனியார் ஆக்கிரமிப்பு, இயற்கை சீற்றத்தால் மணலில் புதைந்துவிட்டன. இந்நிலையில் 2013-ம் ஆண்டு விவேகானந்தரின் 150-வது பிறந்ததினத்தையொட்டி, விவேகானந்த கேந்திரம் அமைப்பு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தங்களை புனரமைக்கத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 28.01.2014-ல் தொடங்கி வைத்து இத்திட்டத்துக்கு பசுமை ராமேசுவரம் எனப் பெயர் சூட்டினார்.
இதுகுறித்து பசுமை ராமேசுவரத்தின் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி: பசுமை ராமேசுவரம் திட்டத்தை அப்துல் கலாம் தொடங்கிவைத்தபோது, ராமேசுவரத்தில் உள்ள தீர்த்தங்களில் 10 புனித தீர்த்தங்களை புனரமைத்திருந்தோம். அப்போது கலாம் விவேகானந்த கேந்திரம் ராமாயணத்துடன் தொடர்புடைய தீர்த்தங்கள் அனைத்தையும் புனரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விவேகானந்த கேந்திரம், பசுமை ராமேசுவரம் திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளாக 36 தீர்த்தங் களை ரூ.3.5 கோடி செலவில் புனரமைத்துள்ளது.
இதில் தர்மர், சர்வரோக நிவாரண, பரசுராம், ஞானவாதி, குமுதம், ஹர, நீலகண்ட, பனச்ச ஆகிய தீர்த்தங்கள் முழுமையாக மணலில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு புனரமைக்கப் பட்டுள்ளன. இக்குளங்களில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது.
27.07.2017-ல் கலாம் நினைவிடத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திரமோடி, விவேகானந்த கேந்திரம் அமைப்பின் பசுமை ராமேசுவரம் திட்டத்தை பாராட்டி பேசினார். தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 12.01.2019 அன்று ராமேசுவரம் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட 30 தீர்த்தங் களையும் பொதுமக்களின் பயன் பாட்டுக்கு அர்ப்பணித்தார் என்றார்.