பெரியார் பாதையில் சமநிலைச் சமூகம் அமைப்போம் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், "பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும்" என, சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, தமிழகத்திலுள்ள தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளான செப்.17-ம் தேதி அன்று உறுதிமொழி எடுக்கப்படும் எனவும், அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, பெரியாரின் பிறந்த நாளான இன்று, சென்னை, அண்ணா சாலையில் உள்ள அவருடைய சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, மூத்த அமைச்சர்கள் உடனிருந்தனர்.
பின்னர், தலைமைச் செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் 'சமூக நீதி நாள்' கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது, உறுதிமொழியை முதல்வர் வாசிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "ஒடுக்கப்பட்டோர் ஒளி பெற்றார்கள். பெண்ணினம் மேன்மை அடைந்தது. அத்தகைய பேரொளி பிறந்த நாளில் சமூக நீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடே எடுத்துக் கொண்டது. சமநிலைச் சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் அய்யா!" எனப் பதிவிட்டுள்ளார்.