‘‘ஸ்மார்ட் சிட்டி ஊழலைக் கண்டுபிடிப்பது பெரிய வித்தை இல்லை. பெரிய ரெய்டுகள் நடக்கின்றன. ஜாக்கிரதை’’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எச்சரித்தார்.
தவறு நடந்திருந்தால், முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன் நிறுத்துங்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
மதுரை ஸ்மார்ட் சிட்டி ஆய்வுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைச்சராக எனக்குத் தனிப்பட்ட பங்கு எதுவும் இல்லை. சட்டமன்ற உறுப்பினராகத்தான் பங்கேற்றுள்ளேன். இந்த திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்படுகிறது. தேர்தல் நடக்காததால் மத்திய அரசு, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய ரூ.2,805 கோடியை வழங்கவில்லை.
பொதுவாக வரவேண்டிய நிதியையே உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் சொல்லித் தரமறுத்த மத்திய அரசு, எப்படி மேயர், கவுன்சிலர்கள் இல்லாமலே ஸ்மார்ட் சிட்டிக்கு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கியது?
இன்று லக்னோவில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பங்கேற்க முடியவில்லை. கடைசி நேரத்தில் அழைப்பு வந்ததோடு அதில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி ஆலோசிப்பது குறித்து முன்கூட்டியே தெரியவில்லை.
டெல்லியில் நடந்திருந்தால் கூட ஒரே விமானத்தில் சென்று வந்திருக்கலாம். ஆனால், லக்னோவுக்குச் செல்ல 3 விமானங்கள் மாற வேண்டும். அதே நேரத்தில் அந்தக் கூட்டத்திற்காக மதுரையில் இன்று என்னால் 15, 20 நிகழ்ச்சிகளை ரத்து செய்ய முடியவில்லை. அதனால், அந்தக் கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் விஞ்ஞான அறிவியல் உலகத்திற்கே தெரியும். அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்கிறார். ஊழலைக் கண்டுபிடிப்பது பெரிய வித்தை இல்லை. தற்போது பெரிய ரெய்டுகளெல்லாம் நடக்கின்றன. ஜாக்கிரதை’’ என்றார்.
செல்லூர் கே.ராஜூ சவால்
மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர அலுவலகத்தில் பெரியார் உருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பெரியார் தமிழகத்தின் தன்மானத்தை மீட்டெடுத்தவர். அண்ணா, திமுகவைத் தொடங்கி ஒரு குடும்பமாய் தமிழக மக்களை இணைத்தவர். அதன்பின், அண்ணா கொள்கைகளில் இருந்து திமுக தடம் மாறிச் சென்றதால் அதிமுக தொடங்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொறுப்பான நிதி அமைச்சர் வாயிலிருந்து பொறுப்பில்லாத வார்த்தைகள் வருவது வரவேற்கும்படியாக இல்லை.
தற்போது நிதித்றை அவரிடத்தில் உள்ளது. சட்டம், அதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. தவறு நடந்திருந்தால், முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன் நிறுத்துங்கள். பொத்தாம் பொதுவாகக் குறை சொல்லாதீர்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரெய்டு நடப்பது வழக்கம்தான். எங்களுக்கு மடியில் கனமில்லை’’ என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.