உதயநிதி ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம், உதயநிதி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம், உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியின் தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ''உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்துத் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவரது வேட்புமனு ஏற்றுக்கொண்டதைச் செல்லாது என அறிவிக்க வேண்டும். தொகுதியின் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என அறிவிக்க வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை இன்று (செப்.17) விசாரித்த நீதிபதி பாரதிதாசன், தேர்தல் ஆணையம், உதயநிதி ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 1-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT