புதுவையில் அரசின் சலுகைகளைப் பெற கரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற ஆளுநரின் கருத்துக்குத் தமிழர் களம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி தமிழர் களம் மாநிலச் செயலாளர் அழகர் இன்று (செப்.17) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசு ஊழியர்களும், பொதுமக்களும் சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே ஊதியமும், நலத்திட்ட உதவிகளும் கொடுக்கப்படும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கூறியுள்ளார்.
மேலும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட வழிவகை செய்வதாகவும், தடுப்பூசி போடாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வாதிகாரி போல் மிரட்டுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். உயர் நீதிமன்றமே தடுப்பூசி போட மக்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ஆளுநர், நீதிமன்ற ஆணையை இழிவுபடுத்தும் விதமாக மக்களை அச்சுறுத்தி வருகிறார். மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்டு மரணமடைந்தவர்கள் விஷயத்தில் அரசு உண்மையை மறைத்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்து வருகிறது.
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் நூறு சதவீதம் மரணம் ஏற்படாது என்று உறுதி அளிக்க முடியுமா? ஆளுநரிடம் உண்மை இருந்தால் புதுச்சேரியில் இதுவரை எத்தனை நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் எத்தனை பேர் நலமுடன் இருக்கிறார்கள். எத்தனை நபர்கள் மரணமடைந்துள்ளனர் என்ற தகவலை வெளிப்படையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
குறைந்தபட்சம் கரோனா தடுப்பூசி போடும் நபர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு திட்டமாவது வழங்க வேண்டும். இது எதுவும் செய்ய முடியவில்லை என்றால் ஆளுநரின் வாய்மொழி உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். ஆளுநர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் மக்களைத் திரட்டிப் போராட்டம் செய்வது மட்டுமல்லாமல் அமைப்பின் சார்பில் பொதுநல வழக்குத் தொடருவோம்.’’
இவ்வாறு அழகர் தெரிவித்தார்.