தமிழகம்

காலாவதியான, உரிமம் இல்லாத மருந்து விற்பனை: ரூ.30 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் 10 மாதங்களில் பறிமுதல் - மருந்து கட்டுப்பாடு துறை நடவடிக்கை

சி.கண்ணன்

தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி 10 மாதங்களில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை மருந்து கட்டுப்பாடு துறை பறிமுதல் செய்துள்ளது.

தமிழகத்தில் தரமில்லாத, காலாவதியான மற்றும் உரிமம் இல்லாத மருந்துகளின் விற்பனையை தடுக்க மருந்து கட்டுப்பாடு துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் சோதனை நடத்த மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் மொத்த மருந்துக் கடைகள், சில்லறை மருந்துக் கடைகள், தனியார் மருத்துவமனை மருந்தகங்களில் அதிரடி சோதனை நடத்தி தரமில்லாத, காலாவதியான மற்றும் உரிமம் இல்லாத மருந்துகளை பறிமுதல் செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கும் தொடரப்படுகிறது.

இது தொடர்பாக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் கூறியதாவது:

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை 10 மாதங்களில் தமிழகம் முழுவதும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தரமில்லாத, காலாவதியான மற்றும் உரிமம் இல்லாத மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-15 மற்றும் 2015-16-ம் ஆண்டுகளில் சுமார் 19 ஆயிரம் மருந்து மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் சுமார் 750 மருந்துகள் தரமில்லாதவை என தெரியவந்தது. தரமில்லாத மருந்துகளை விற்பனை செய்தவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கையால் இதுபோன்ற மருந்துகளின் விற்பனை குறைந்து வருகிறது. மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.4 லட்சம் மருந்துகள்

சென்னை புறநகர் பகுதியில் மருந்துக் கடைகளில் மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர்கள் அடங்கிய 17 குழுவினர் கடந்த 10-ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது ரசீது மற்றும் டாக்டர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகளை விற்ற 34 மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதாக மருந்து கட்டுப்பாடு துறைக்கு புகார் வந்தது. அந்த புகாரின்படி மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர்கள் குழுவினர் கடந்த 12-ம் தேதி திருவல்லிக்கேணியில் சோதனை நடத்தி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள உரிமம் இல்லாத மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT