தமிழகம்

60 ஆண்டு கால கோரிக்கையை மக்கள் நலக் கூட்டணி அரசு நிறைவேற்றும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதி

செய்திப்பிரிவு

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை மக்கள் நலக் கூட்டணி அரசு நிறைவேற்றும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக, அதிமுக ஆட்சியாளர்கள், கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. கடந்த 1991-2007-க்கு இடைப்பட்ட காலத்தில் பவானி ஆற்றில் இருந்து 5 முறை உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 42 ஆயிரத்து 257 கனஅடி நீர் வீணாகிவிட்டது.

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றினால் மழைவெள்ள காலத்தில் பவானி ஆற்றில் வரும் உபரிநீரை மடைமாற்றி 13 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள 71 குளங்கள், 538 குட்டைகளை நிரப்பலாம். இதனால், 50 லட்சம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும்.

மக்கள் கோரிக்கையின் நியாயத்தை உணராத ஜெயலலிதா ஆட்சி, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தூக்கி எறியப்படும் என்பதால் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அமைய உள்ள மக்கள் நலக் கூட்டணி அரசு, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தி, கொங்கு மண்டலத்தின் 60 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT