தமிழகம்

தமிழிசை சவுந்தரராஜன் மகன் திருமணம்: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மகன் திருமண விழாவில் மேகாலய மாநில ஆளுநர் வி.சண்முகநாதன் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை - டாக்டர் சவுந்தரராஜன் தம்பதியின் மகன் டாக்டர் சுகநாதன் - திவ்யா திருமணம், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்து மத முறைப்படி நடந்த திருமண விழாவில் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

முதல்வர் ஜெயலலிதா சார்பில் மணமக்களுக்கு வாழ்த்தும், பரிசுப் பொருட்களும் அனுப்பப்பட்டு இருந்தது. மேகாலய ஆளுநர் சண்முகநாதன், மணமக்களை வாழ்த்தி பரிசுப் பொருட்களை வழங்கினார்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கி.சூரியநாராயண ராவ், பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு, பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி, அதே அரங்கில் நடந்தது. இதில், திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி. ஆகியோரும் வந்திருந்தனர்.

தமிழிசையின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மூத்த துணைத் தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் ராம்லால், தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், விஐடி வேந்தர் விசுவநாதன், தமிழர் தேசிய கட்சித் தலைவர் பழ.நெடுமாறன், காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்களும் மணமக்களை வாழ்த்தினர்.

SCROLL FOR NEXT