தமிழகம்

அரசு பணிகளுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்ச வரம்பு 2 ஆண்டு உயர்வு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

செய்திப்பிரிவு

அரசு பணிகளுக்கான நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி யிருப்பதாவது:

கரோனா தொற்று காரணமாக, பணியாளர் தேர்வு முகமைகளால் (டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்றவை) நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தாமதம் ஆனதால் நேரடி நியமனவயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சர், கடந்த 13-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதற்கு இணங்க பின்வரும் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பு 30-லிருந்து 32 ஆக உயர்த்தப்படுகிறது.

தொடர்புடைய பணி விதிகளில் மேற்குறிப்பிட்ட அளவுக்கும் குறைவான வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும் தற்போது உயர்த்தப்பட்டுள்ள வயது உச்சவரம்பு அளவு பொருந்தும்.

மேற்குறிப்பிட்ட அளவுக்கும் அதிகமாக வயது உச்சவரம்பை கொண்ட பதவிகளைப் பொருத்தவரை தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு மேலும் 2 ஆண்டு உயர்த்தப்படுகிறது.

இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி,எஸ்டி) மற்றும் அனைத்து வகுப்பிலும் உள்ள ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு அல்லது தளர்வுகள் தொடரும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT