ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த 6 பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம். 
தமிழகம்

ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.08 கோடி மதிப்பு தங்கம் உள்ளிட்ட பொருள் பறிமுதல்

செய்திப்பிரிவு

ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவை கடத்தி வரப்பட்ட ரூ.3.08 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களை கோவை மண்டல மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவைவிமான நிலையம் வந்த பயணிகள் சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான 6 பயணிகளின் உடைமைகளை சோதனைசெய்ததில், பேஸ்ட் வடிவிலான தங்கத்தை, தங்களது மலக்குடல் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்டிலும், இதரப் பொருட்களை தங்களது பைகளிலும் அவர்கள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து ரூ.1.92 கோடி மதிப்பிலான 3,985 கிராம் தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட், ஐ-போன், எலெக்ட்ரானிக் பொருட்கள் என ரூ.1.16 கோடி மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 6 பயணிகளை டிஆர்ஐ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT