இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கை கொண்ட அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மன்னார்குடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரின் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) நேற்று சோதனையிட்டு, சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர், விசாரணைக்காக அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் பாவா பக்ருதீன்(43). தனது மனைவியின் சொந்த ஊரான மன்னார்குடியில் உள்ள ஆசாத் தெருவில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், தஞ்சாவூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்று மன்னார்குடிக்கு வந்த தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர் அருண் மகேஷ், உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், பாவா பக்ருதீனின் வீட்டுக்குச் சென்று, அவரது வீட்டை சோதனையிட்டனர். தொடர்ந்து, பாவா பக்ருதீனிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், பாவா பக்ருதீனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களுடன், அவரையும் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “மதுரை காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு தொடரப்பட்ட 721 என்ற குற்ற எண் கொண்ட, முகமது இக்பால் என்பவர் தொடர்புடைய ஒரு வழக்கில் பாவா பக்ருதீனுக்கும் தொடர்பு இருக்கிறது. இவர் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கை கொண்ட சில அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது என்றனர்.