திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் நடைபெற்ற தினகரனின் மகள் திருமணத்தில் சசிகலா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 
தமிழகம்

திருவண்ணாமலையில் தினகரனின் மகள் திருமணம்: சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் அமமுக பொதுச் செயலர் தினகரனின் மகள் திருமணம் நேற்று நடைபெற்றது.

அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் – அனுராதா தினகரன் தம்பதியரின் மகள் ஜெயஹரிணி, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் பூண்டி எஸ்டேட் கிருஷ்ணசாமி வாண்டையார் – ராஜேஸ்வரி அம்மாள் தம்பதியரின் மகன் ராமநாத துளசி ஐயா வாண்டையார் ஆகியோரது திருமணம் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.

சசிகலா தலைமையில் நடைபெற்ற இத்திருமணத்தில், வேலூர் நாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மா, தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மணமகன் வரவேற்பு கடந்த 15-ம் தேதி இரவு நடைபெற்றது.

முன்னதாக, திருமண விழாவுக்கு அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்த சசிகலாவை அமமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

திருமண விழாவில் விஐடி துணைவேந்தர் செல்வம், நடிகர்கள் பிரபு, ராம்குமார், தேமுதிக துணைச் செயலர் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன், டிடிவி தினகரன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிருஷ்ணசாமி வாண்டையார் குடும்பத்தினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்குப் பிறகு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று மணமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT