கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகரில் வசிப்பவர் சேகர்(57). இவர், கும்பகோணத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
பள்ளிகள் செப்.1-ல் திறக்கப்பட்டநிலையில், ஆசிரியர் சேகர் பிளஸ் 1 மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் 23 மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, 23 மாணவிகளிடம் அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் முன்னிலையில் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணை நடந்தது.
பின்னர், தஞ்சாவூர் எஸ்பி ரவளிப்ரியாவிடம் பள்ளி நிர்வாகம் சார்பிலும், மாணவிகள் சார்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. இதைஅடுத்து, கும்பகோணம் கிழக்கு போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து, சேகரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
பள்ளி நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘ஆசிரியர் சேகர் கடந்த 2004 முதல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை கல்வித் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர். அதன் பின்பு அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார். கல்வித் துறை அதிகாரிகள் சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதால், தற்போது எஸ்பியிடம் புகார் அளித்தோம்’’ என்றனர்.
மதபோதகர் கைது
திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்தவர் சாமுவேல்(36). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அங்குள்ள பெத்தேல் சபையில் மத போதகராக பணியாற்றி வந்தார். இந்த சபைக்கு வந்த 17 வயது பிளஸ் 2 மாணவியிடம், சாமுவேல் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், சாமுவேல் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.