கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயத் திருவிழா நேற்று கொடியேற் றத்துடன் தொடங்கியது.
இந்தியா இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா நேற்று மாலை 4 மணியளவில் தொடங் கியது. இத்திருவிழாவை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசம் ஆலயத்தின் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். யாழ்ப்பாணம் துணைத் தூதர் என்.நடராஜன், நெடுந்தீவு மறை மாவட்ட ஆயர் ஆண்டனி ஜெயரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் 3,496 பேர் தங்கள் பெயர் களைப் பதிவு செய்திருந்தனர். கச்சத்தீவு செல்வதற்காக ராமேசுவரம் மீன்பிடி துறை முகத்தில் தமிழக பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் குவிந்தனர்.
கச்சத்தீவு செல்ல விண்ணப்பித்தவர் களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, மீன்வளத் துறை சார்பாக கடல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொருவருக்கும் ‘லைப் ஜாக்கெட்’ வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சோதனைச் சாவடிகளில் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு 93 விசைப் படகுகளில் 3,249 பயணிகள் கச்சத் தீவு புறப்பட்டுச் சென்றனர்.
இந்திய பக்தர்களின் பாதுகாப்புக்காக 6 கடலோரக் காவல் படை கப்பல்கள் இந்திய கடல் எல்லை வரை சென்றன. அங்கிருந்து கச்சத் தீவு வரை இலங்கை கடற்படை கப்பல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்புத் திருப்பலி பூஜையும், அந்தோனி யார் தேர் பவனியும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா முடிவடையும். அதைத் தொடர்ந்து இரு நாட்டினரும் அவரவர் நாடுகளுக்கு திரும்புவர்.