சவுமியா சாசு 
தமிழகம்

நீதிபதி ஆவதே எனது லட்சியம்: நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் கருத்து

செய்திப்பிரிவு

நீதிபதி ஆவதே லட்சியம் என நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் தெரிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு உதகையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக திருநங்கை தீப்தி பொறுப்பேற்று வனத்துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றார். இவர் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்.இந்நிலையில், தற்போது உதகை காந்தல் குருசடி காலனியை சேர்ந்த சவுமியா சாசு முதல் திருநங்கை வழக்கறிஞராகியுள்ளார்.

இவர், திருச்சியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு முடித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவுசெய்து வழக்கறிஞராக பயிற்சி பெற உள்ளார். இதையடுத்து, ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து, பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பணியாற்ற பதிவு செய்ததை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

சவுமியா கூறும்போது, ‘‘தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை ஒருவர் கர்நாடகாவில் சட்டப் படிப்பு முடித்து, தமிழகத்தில் பதிவு செய்தார். முதல் முறையாக நான் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் பயின்று பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன். இதன்மூலம் திருநங்கைகளுக்கு சட்ட வழிகாட்டுதல் செய்வதோடு, அனைத்து மக்களுக்கும் சேவை செய்வேன். நீதிபதி ஆவதே எனது லட்சியம். வரும் 24-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் பங்கேற்க உள்ளேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT