சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. பணிகள் தாமதம் இன்றி நடக்கவும், கண்காணிக்கவும் தனி அமைப்பு உருவாக்கப்படுகிறது.
கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி - விவேகானந்தர் இல்லம் என3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்இயக்குவதற்கான திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
சுரங்கம் தோண்டுவது, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கட்டுமான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணி ஆணைகள் வழங்கும் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. இதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பூந்தமல்லியில் இருந்து கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், போரூர் சந்திப்பு, வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம், வடபழனி வழியாக விவேகானந்தர் இல்லத்துக்கு மெட்ரோ ரயில் தடம் அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. போரூர் மேம்பாலம், போரூர் சந்திப்பு பகுதியில் 15-க்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்கள் மூலம் கடந்த சில நாட்களாக பள்ளம் தோண்டும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து கேட்டபோது, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா ஊரடங்கின்போதே மெட்ரோ ரயில் 2-ம் திட்டப் பணிகளுக்கு டெண்டர்கள் வெளியிடப்பட்டு, நிறுவனங்களை தேர்வுசெய்து வந்தோம். பெரும்பாலான பணிகளுக்கு நிறுவனங்கள் தேர்வுசெய்யப்பட்டு, பணிக்கான ஆணைகளும் வழங்கியுள்ளோம். அதன்படி, தொடர்புடைய நிறுவனங்கள் தாமதம் இன்றி கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளன.
தற்போது, மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பாதைகளை தேர்வுசெய்து, ஆங்காங்கே தடுப்புகள்அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலைகளின் மேற்பகுதியை நீக்கி பூமியைதோண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை 2026-ல் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், தனி அமைப்பை ஏற்படுத்தி, தொடர்புடைய நிறுவனங்கள் தாமதம் இன்றி பணி மேற்கொள்வதை கண்காணிக்கவும், பணிகளின் அடுத்தடுத்த நிலைகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.