தமிழகம்

கரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகளை பின்பற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பாதித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு, ‘கரோனாவால் இறந்தவர்’ என சான்றிதழ் வழங்கப்படாததால், அவர்களின் குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளை பெற முடியவி்ல்லை எனக் கூறி ஸ்ரீராஜலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘உச்ச நீதிமன்றஉத்தரவின் அடிப்படையில் கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளின் அடிப்படையில், மாவட்டஅளவில் கூடுதல் ஆட்சியர்,தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவைஅமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என கூறப்பட்டிருந்தது.

அதை பதிவு செய்து கொண்டநீதிபதிகள், ‘‘கரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும்போது உரிய விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக ஆய்வுநடத்தும் மாவட்ட குழுக்கள் ஆக.31-ம் தேதிக்கு முந்தைய மரணங்களுக்கு, அக்.31-ம் தேதிக்குள் இறப்பு சான்றிதழ்களை வழங்கவேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்களில் கரோனாவால் மரணம் நிகழ்ந்துள்ளது என குறிப்பிடப்படாமல் இருந்து, ஆய்வில் அந்த மரணம் கரோனா காரணமாக நிகழ்ந்துள்ளது என தெரியவந்தால் ஒரு மாதத்துக்குள் கூடுதலாக சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள இறப்பின் காரணம் திருப்தி அளிக்காவிட்டால், மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து, அதிகாரப்பூர்வ ஆவணப்படிவம் பெற்றுக்கொள்ளலாம்,’ என, தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT