முத்துப்பாண்டி 
தமிழகம்

சிவகங்கையில் முன்விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் கொலை

செய்திப்பிரிவு

முன்விரோதம் காரணமாக சிவகங்கையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை அருகே வைரவன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி(45). ஒப்பந்ததாரரான இவர் சிவகங்கை நெல்மண்டி தெருவில் வசித்து வந்தார். பாஜக மீனவர் பிரிவு மாவட்ட துணைத் தலைவராக இருந்தார்.

இந்நிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள டீக்கடையில் நேற்று மாலை டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் முத்துப்பாண்டியை தேடி அவரது வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர் இல்லாததால் அவரது காரை சேதப்படுத்தினர். பிறகு டீக்கடையில் முத்துப்பாண்டி இருந்ததைப் பார்த்த அந்த கும்பல் அவரை வெட்டுவதற்கு வாகனத்தில் இருந்து அரிவாளை எடுத்தது.

இதை பார்த்ததும் அவர் தப்பி ஓடினார். விரட்டி வந்த அக்கும்பல் முத்துப்பாண்டியை வெட்டிவிட்டு தப்பியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தோர் முத்துப் பாண்டியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். முத்துப்பாண்டிக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், டி.எஸ்.பி. பால்பாண்டி, சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். இது குறித்து சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறுகையில், உறவினர்களிடையே முன்விரோதம் காரணமாக கொலை செய் திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT