பழநி உள்பட தமிழகத்தின் முக்கிய 10 கோயில்களில் வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்ட பக்தர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க மலிவு விலையில் பூஜைப் பொருள்கள், தேங்காய், வாழைப்பழம் விற்பனை செய்யும் புதிய திட்டம், இந்து அறநிலையத் துறை சார்பில் விரைவில் தொடங்கப்படுகிறது.
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 2,000 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயிலில் தைப்பூசத் திருவிழா, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
தைப்பூசத் திருவிழாவில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சாதாரண நாட்களில்கூட 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் பழநியில் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
ஏமாற்றப்படும் பக்தர்கள்
இந்தக் கோயிலில், சாதாரண நாட்கள் மட்டுமின்றி விழா காலங்களில் தரிசனம் மற்றும் பூஜை செய்ய வரும் பக்தர்கள் தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பூஜை பொருள்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. குறிப்பாக முக்கிய விழா மற்றும் விசேஷ காலங்களில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு, கோயில் பகுதியில் ஒரு தேங்காய் தட்டு ரூ.50 முதல் ரூ.70 வரை கூடுதல் விலைக்கு விற்கின்றனர். அதனால், இந்த சிண்டிகேட் வியாபாரத்தால் வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
அதனால், இந்து அறநிலையத் துறை பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் வழங்குவதைப்போல், ஸ்டால்கள் அமைத்து பக்தர்களுக்கு தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை மலிவு விலையில் வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய திட்டம் பக்தர் களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தமிழகத்தின் இதர முக்கியக் கோயில்களிலும் செயல்படுத்த இந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
பக்தர்கள் வரவேற்பு
இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: ‘‘பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், ரங்கம் ரங்கநாதர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் திருத்தணி, திருவேற்காடு, சமயபுரம், திருவண்ணாமலை, சுசீந்திரம் ஆகிய 10 கோயில்களில் முதற்கட்டமாக மலிவு விலையில் தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் பக்தர்களுக்கு மலிவு விலையில் வழங்கும் திட்டத்தை தொடங்க இந்து அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. மொத்தமாக தேங்காய், வாழைப்பழத்தை டெண்டர் மூலம் கொள்முதல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இதற்காக ஒவ்வொரு கோயிலிலும், இத்திட்டத்தை செயல்படுத்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, தேவைப்படும் தேங்காய், வாழைப்பழங்களின் தோராய மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்பட்சத்தில் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவர்’’ என்றார்.