குடியரசுத் தலைவரும், பிரதமர் மோடியும் நினைத்தால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியும் எனக் கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி கரூர் எம்.பி. ஜோதிமணி அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய, தலா ரூ.62,000 வீதம் ரூ.3.10 லட்சத்திலான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.16-ம் தேதி) நடைபெற்றது.
எம்.பி. ஜோதிமணி மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’நீட் தேர்வு தொடர்பாகத் தமிழக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துவருவது மிகுந்த வேதனையும், துயரத்தையும் அளிக்கிறது. மாணவர்கள் யாரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். ஒரு தேர்வு மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானித்து விடாது.
வாழ்க்கையில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. ஒளிமயமான எதிர்காலம் அமையும். அதை அமைத்துத் தரும் கடமை அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளது. மருத்துவம் படிக்க விரும்பும் தகுதி மற்றும் திறமை இருக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை ஏற்படுத்தித் தருவது அரசியல் கட்சிகளின் கடமை. அதற்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம்.
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கும் வித்தியாசம் உள்ளது. தற்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முறைப்படி நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்படுகிறது.
குடியரசுத் தலைவரும், பிரதமர் மோடியும் நினைத்தால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியும். நீட் தேர்வில் பெரிய அரசியல் செய்து மாணவர்களின் மரணத்திற்குக் காரணமாக இருப்பதை விட்டுவிட்டு தவறைத் திருத்திக் கொண்டு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
நீட் தேர்வு வினாத்தாள் ரூ.35 லட்சத்திற்கு வெளியே விற்கப்படுகிறது. இதனால் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற முடியாத நிலை உருவாகிறது. நீட் தேர்வுக்கு எதிரான அநீதியை எதிர்த்துப் போராடுவோம். நீட் தேர்வுக்கு எதிரான போர்க்குரல்தான் காப்பாற்றும். மரண ஓலம் காப்பாற்றாது. மாணவர்களின் போராட்டத்திற்குத் துணை நிற்போம்’’.
இவ்வாறு ஜோதிமணி தெரிவித்தார்.