பன்னோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றினால் அதிமுக போராட்டம் நடத்தும் என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் அக்கட்டிடத்தைத் திறந்துவைத்தார். பின்னர், 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அக்கட்டிடத்தை அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றினார். தற்போதுவரை அங்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்கிருந்த 'புதிய சட்டப்பேரவை தலைமைச் செயலக வளாகம்' என்ற கல்வெட்டு அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அந்தக் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இந்தக் கல்வெட்டு பொருத்தப்பட்டுள்ளது.
அந்தக் கல்வெட்டில் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி அன்று கருணநிதி தலைமையில் சோனியா காந்தி முன்னிலையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சட்டசபை அரங்கம், தலைமைச் செயலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்த விவரம் இடம் பெற்றுள்ளது.
எனவே, அம்மருத்துவமனையைத் தற்போதைய திமுக அரசு மீண்டும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையாக மாற்றும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் இன்று (செப். 16) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தொலைநோக்குப் பார்வையுடன் அதனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றினார். அதனால்தான் கரோனா காலத்தில் எவ்வளவோ உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
உயிர்களைக் காப்பாற்றும் அந்த மருத்துவமனையை மக்களின் விருப்பத்துக்கு மாறாக, அதிமுகவின் எண்ணத்துக்கு மாறாக, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவரது தந்தை புகழ்பாடுவதற்காக மாற்றுகின்றனர். பன்னோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றினால் அதை எதிர்த்து பொதுமக்களைத் திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும். அந்த நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்" எனத் தெரிவித்தார்.