தமிழகம்

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க நளினிக்கு ஒரு நாள் பரோல்

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் நளினி உள்ளார். இவரது தந்தை மரணமடைந்ததை முன்னிட்டு இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நளினிக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

நளினியின் தந்தையும், ஓய்வுபெற்ற காவல் துறை ஆய்வாளருமான சங்கர நாராயணன் திருநெல்வேலி மாவட்டம் அம்பலவாணபுரத்தில் வசித்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மரணமடைந்தார். நளினி யின் தாயார் மற்றும் சகோதரர் சென்னை கோட்டூரில் உள்ள எல்லையம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். ஆகவே, மரணமடைந்த சங்கர நாராயணனின் உடல் சென்னைக் குக் கொண்டுவரப்பட்டது. இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகின்றன.

நளினிக்கு அனுமதி

இந்நிலையில் தந்தையின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வசதியாக வேலூர் சிறையில் உள்ள நளினியை 3 நாள் விடுப்பில் அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னையில் உள்ள சிறைத் துறை தலைவர் மற்றும் வேலூர் பெண்கள் சிறப்பு சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நளினியின் தாயார் பத்மாவதி நேற்று மனு அளித்தார். இதனையடுத்து நளினிக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்து சிறைத் துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

2004-ம் ஆண்டில்..

ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 1991-ம் ஆண்டு நளினி கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது சகோதரர் திருமணத்தில் பங்கேற்பதற்காக 2004-ம் ஆண்டு ஒரேயொரு நாள் மட்டும் சிறையிலிருந்து விடுப்பில் வெளியே வந்தார். அதன் பிறகு இப்போதுதான் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஒரு நாள் அனுமதிச்யில் சிறையில் இருந்து வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT