டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானம் வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீஸார், மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சை, கும்பகோணம் உள்படப் பல்வேறு காவல்நிலைய சரகங்களில் சட்டவிரோதமாக இரவில் மதுபானம் விற்பனை செய்ததாகப் பலரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தன.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. டாஸ்மாக் மதுபானக் கடைகளிலிருந்து 300 பாட்டில், 500 பாட்டில் என மதுபானங்களை வாங்கி பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். இதனால் ஜாமீன் வழங்கக்கூடாது'' என்று தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி, ''டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒருவருக்கு 200, 300, 500 மதுபான பாட்டில்களை விற்பனை செய்தது யார்? மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதுதொடர்பாக போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மனுதாரர்களில் பலர் மாவட்ட நீதிமன்றங்களில் ஜாமீன் கோரியபோது அங்கு போலீஸார் தெரிவித்த தகவலிலும், உயர் நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்த தகவலிலும் முரண்பாடு உள்ளது. இதனால் மனுதாரர்களுக்கும், போலீஸாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரர்களில் வேறு வழக்குகள் நிலுவையில் இல்லாதவர்களுக்கு ஜாமீன் வழங்கியும், 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளவர்களுக்கு ஜாமீன் மறுத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.