வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி தனித்துப் போட்டியிட்டால் ஊரகஉள்ளாட்சி தேர்தலில் 7 மாவட்டங்களில் அதிக இடங்களை வெல்லமுடியும் என்று பாமக தலைமை ஆணித்தரமாக நம்புகிறது. அதனால்தான் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியுள்ளது.
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக வருகிறஅக்டோபர் 6, 9-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வந்த பாமக, இம்மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. 9மாவட்டங்களின் துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்பு நேற்று முன்தினம் இரவு பாமக இதனை அதிகாரபூர்வாக அறிவித்தது.
இந்த முடிவுக்கு காரணம் என்னவென்று பாமக தலைமை நிலைய நிர்வாகிகளிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: இத்தேர்தலில் பாமகவுக்கு 20 சதவீதஇடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என அதிமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. தற்போதுள்ள சூழலில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி தனித்துப் போட்டியிட்டால் 7 மாவட்டங்களில் அதிக இடங்களை வெல்ல முடியும்என்று பாமக தலைமை ஆணித்தரமாக நம்புகிறது.
கரோனா தொற்றுக்குப் பின்னர்பாமக தலைவர்களான ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி ஆகியோர் பொதுவெளியில் அதிக அளவில் சென்று தொண்டர்களை சந்திக்கவில்லை என்ற குறை கட்சியினரிடையே உள்ளது.
தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட்டால் தொண்டர்களை நேரடியாக சந்திக்க இயலும். அதன் மூலம் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முடியும் என்று பாமக நம்புகிறது. எப்போதுமே வெற்றிபெறும் குதிரையில் சவாரி செய்து வந்த பாமக, சமீப காலமாக அதில் மிகப்பெரிய பின்னடைவைக் கண்டுள்ளது.
இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு விகிதத்தை உயர்த்த வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், இம்முடிவை பாமக தொண்டர்கள் ரசிக்கவில்லை. அவர்களை சமாதானப்படுத்துவது சவாலாக இருக்கும். அதையும் சரி செய்தே, தனித்து களம் காண கட்சித் தலைமை விரும்புகிறது என்று தெரிவிக்கின்றனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை பாமக ஒத்திகையாகவே பார்க்கிறது. நகராட்சி, மாநகராட்சி தேர்தலை பிரதானமாக மனதில் வைத்தே இந்த முடிவை பாமக தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பெறும் வாக்கு சதவீதத்தைக் கொண்டு அடுத்த நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் தனித்தோ அல்லது கூட்டணி வைத்தோ பாமகவினர் களம் காண்பார்கள் என தெரிகிறது.