புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான உத்தரவை வழங்கும் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன். உடன், ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர். 
தமிழகம்

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்ட மசோதா தாக்கல் செய்யவில்லை: சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

செய்திப்பிரிவு

ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அதை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவில்லை என சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.150 கோடியில் 1,950 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது. பங்களிப்பு தொகையைமுழுமையாக செலுத்திய 376 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் நேற்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலசட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து வழங்கினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது: நீட் தேர்வு, 7 பேர் விடுதலை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு காலதாமதம் ஆகலாம். ஆனால், நீதி நிச்சயம் ஒருநாள் வெல்லும்.

அண்ணா பிறந்தநாளையொட்டி நன்னடத்தை விதிகளைப் பின்பற்றித்தான் கைதிகள் 700 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். இதில், விமர்சனத்துக்கு இடமில்லை என்றார்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஏற்கெனவே கூறியபடி ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யாதது குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது: ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் நல்ல தீர்ப்புகிடைக்கும் என அட்வகேட் ஜெனரல் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இதனால், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவில்லை என்றார். இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ வை.முத்துராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT