காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்யா நீட் தேர்வு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலுக்கு அமைச்சர் ஆர்.காந்தி, சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்போராட்டம் நடக்கிறது; மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது: கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவுரை

செய்திப்பிரிவு

‘நீட்’ தேர்வு ரத்து செய்வது தொடர்பான சட்டப்போராட்டத்தை தமிழக அரசு நடத்தி வருகிறது. எனவே, மாணவர்கள் தவறான முடிவு எடுப்பதை கைவிட வேண்டும் என கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி திருநாவுக்கரசு மகள் சவுந்தர்யா மருத்துவப்படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வுஎழுதியிருந்தார். இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என தனது பெற்றோரிடம் வேதனையடைந்த மாணவி சவுந்தர்யா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு பயத்தால் ஏற்கெனவே ஒரு மாணவர், ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோகம் அடங்குவதற்கு முன்பாக காட்பாடி அருகே மற்றொரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று மாலை கூலித்தொழிலாளி திருநாவுக்கரசு வீட்டுக்கு சென்று அங்கு மாணவியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பிறகு, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி ஆறுதல் கூறி அவர்களை தேற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது, ‘‘மாணவர்கள் தவறான முடிவை எப்போதும் எடுக்கக்கூடாது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தையும் தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. ஆகவே, நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் எந்தவிதமான தவறான முடிவுகளை எப்போதும் எடுக்கக்கூடாது.

உயிரிழந்த மாணவி சவுந்தர்யா குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. மாணவியின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்’’ என்றார். அப்போது, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் உடனிருந்தார்.

இதைத்தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி காட்பாடி அடுத்த தலையராம்பட்டு கிராமத்துக்கு நேற்று மாலை வந்தார். பிறகு திருநாவுக்கரசு வீட்டுக்கு சென்று உயிரிழந்த மாணவி சவுந்தர்யாவின் உடலுக்கு கே.சி.வீரமணி மாலை அணிவித்து, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, அதிமுக மாநகர மாவட்டச்செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, அதிமுக பொருளாளர் எம்.மூர்த்தி, முன்னாள் மாவட்டச்செயலாளர் ராமு உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT