தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துக: மாநிலத் தேர்தல் ஆணையரிடம் பாமக வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிக்குமாரை பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

இது தொடர்பாக இன்று அவர் அளித்த கடிதத்தின் விவரம்:

''தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 37 ஊரக மாவட்டங்களில் 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டது. மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும் அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு குறைந்தது 10 நாட்களுக்குப் பிறகு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் வகையில் தேர்தல் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தால்தான் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யப் போதிய கால அவகாசம் கிடைக்கும். ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 மணி நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியிருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்வு செய்யப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை.

அதுமட்டுமின்றி, 76.59 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை இரு கட்டங்களாக நடத்துவது நியாயமற்றது. இதைவிட சுமார் 10 மடங்கு அதிக வாக்காளர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே கட்டமாகத்தான் நடத்தப்பட்டுள்ளன. இரு தேர்தல்களும் ஒன்றாக நடத்தப்பட்ட போதுகூட, வாக்குப்பதிவு ஒரே கட்டமாகத்தான் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், தலா 50 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளைக் கொண்ட 140 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தலை முதல் கட்டமாக 78 இடங்கள், இரண்டாம் கட்டமாக 62 இடங்கள் என்றும், 1381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான தேர்தலை முதல் கட்டமாக 755 இடங்கள், இரண்டாம் கட்டமாக 626 இடங்கள் என்றும் பிரித்து நடத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல. இது ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்னொரு பகுதிக்குச் செல்லவும், உள்ளாட்சித் தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதற்கும்தான் வழிவகுக்கும் என்பதை ஆணையம் உணர வேண்டும்.

ஊரக உள்ளாட்சிகள்தான் இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பு ஆகும். கிராம சுயராஜ்யம் குறித்த தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் கனவு நனவாக வேண்டும் என்றால் ஊரகப் பகுதி உள்ளாட்சித் தேர்தல்கள் மிகவும் நியாயமாக நடைபெற வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த ஆணையிட வேண்டும் என்று பாமக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT