தமிழகம்

சேப்பாக்கம் சேகுவேரா எங்கு இருக்கிறார்?- உதயநிதியை விமர்சித்த ஜெயக்குமார்

செய்திப்பிரிவு

உதய நிதிக்கு மக்களை பற்றி கவலை இல்லை, சேப்பாக்கம் சேகுவேரா தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து, உலக முழுவதும் வாழும் தமிழ் மக்களின் உள்ளங்களில் வாழ்பவர் அண்ணா.

கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது பாமகவின் முடிவு. உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதால் அவர்களுக்குதான் இழப்பு. அதிமுகவுக்கு இழப்பு இல்லை.

திமுகவை பொறுத்தவரை பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு மக்களை மொட்டை அடித்துவிட்டார்கள் இதன் தாக்கம் உள்ளாட்சி தேர்தலில் தெரியும்.

மக்கள் எங்களோடு இருக்கும்வரை எங்களுக்கு இழப்பு இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் என்பது சிறந்த பதவி. பிரச்சனைகளை எழுப்பி மக்கள் பிரச்சனைக்கும் தீர்வு காணும் இடமே சட்டப்பேரவை. அரசியலில் பல ஆண்டுகள் இருந்து, தியாகம் செய்து, போராட்டங்களை நடத்தியவர் சட்டப் பேரவைக்கு சென்றால் அப்பதவி பெரிய பதவியாக இருக்கும்.

உதய நிதியை பொறுத்தவரை சினிமாவில் மகிழ்ச்சியாக இருந்தவர். அவரை வலுக்கட்டாயமாக சட்டப் பேரவையில் உட்கார வைத்தால் அவருக்கு போர்தான் அடிக்கும். அவருக்கு மக்களை பற்றி அக்கறை இல்லை. சேப்பாக்கம் சேகுவேரா தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT