நாடாளுமன்ற தேர்தலில் பாமக வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவு தர உள்ளதாக தேமுதிக கட்சியின் தொகுதி செயலர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.
உப்பளம் தொகுதி செயலாளர் பி.எம்.பாஸ்கர் தலைமையில் அக்கட்சியின தொகுதி செயலர்கள் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த 2011-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் நாங்கள் 30 தொகுதிகளிலும் அவர்களுக்கு தேர்தல் பணிபுரிந்தோம். ஆனால் எங்களுக்கு நன்றி சொல்லக்கூட முதல்வர் ரங்கசாமி மறந்து விட்டார்.
தற்போதைய தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம். புதுவையில் பாஜக, மதிமுக போட்டியிடவில்லை. பாமக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 14 தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாமகவினர் பணிபுரிந்து வருகின்றனர். அதே போல் புதுவையில் நாங்கள் பாமக வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவாக தேர்தல் பணிபுரிய முடிவு செய்துள்ளோம். எனினும் கட்சித் தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றார் பாஸ்கர்.