கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலை வழியாக சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகள் தொடங்க உள்ளதால் நேற்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளை ஒழுங்குபடுத்தி வழிநடத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மெட்ரோ பணியாளர்கள். படம்: ம.பிரபு 
தமிழகம்

மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிக்காக கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: ஓராண்டு வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிப்பு

செய்திப்பிரிவு

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி காரணமாக கோடம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் என்று போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் 2- ம் கட்டப் பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் 80 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, இப்பகுதிகளில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் வருமாறு:

போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வழக்கமான பாதையில் செல்லலாம்.

கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக போரூர், சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி, இரண்டாவது அவென்யு சாலை வழியாக 100 அடி சாலை சந்திப்பு வரை சென்று, ராஜன் சாலை, ராஜமன்னார் சாலை, 80 அடி சாலை, வன்னியர் சாலை வழியாக போரூர் சாலிகிராமம் செல்லலாம்.

கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பு நோக்கி, ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2-வதுஅவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாகச் சென்று, வடபழனி சந்திப்பை அடையலாம்.

வடபழனி சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக் கூடாது. மாறாக பவர் ஹவுஸ் சந்திப்பு, அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.

அசோக் பில்லரிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.

ஆற்காடு சாலையில் துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து பவர் ஹவுஸ் சந்திப்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம். ஆனால், பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்புக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை (ஒருவழிப் பாதை).

அம்பேத்கர் சாலை 2-வது அவென்யு சாலை சந்திப்பிலிருந்து 100 அடி சாலை சந்திப்புக்கு வாகனங்கள் செல்லலாம். ஆனால், 2-வது அவென்யு சாலை 100 அடி சாலை சந்திப்பிலிருந்து, அம்பேத்கர் சாலை 2-வது அவென்யு சாலை சந்திப்புக்குச் செல்ல அனுமதியில்லை (ஒருவழிப் பாதை).

அம்பேத்கர் சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்புக்குச் செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பிலிருந்து பவர் ஹவுஸ் சந்திப்புக்குச் செல்ல அனுமதியில்லை. (ஒருவழிப் பாதை).

போக்குவரத்து மாற்றம் நேற்று முதலே அமலுக்கு வந்ததால், வழக்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் தடுமாறினர். அவர்களுக்கு போக்குவரத்து போலீஸாரும், மெட்ரோ ரயில் பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் உதவி செய்தனர்.

போக்குவரத்து மாற்றத்தால் சில இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT