கணவரின் உயிருக்கு ஆபத்து எனக் கூறி புதுமணப் பெண்ணிடம் நூதன முறையில் நகையை திருடிச் சென்ற போலி மந்திரவாதியை ஐஸ்அவுஸ் போலீஸார் தேடி வருகின்றனர்.
ராயப்பேட்டை யானைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரிகானா பேகம். இவரது கணவர் மன்சூர் பாஷா. இவர்களுக்குச் சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் ரிகானா பேகம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு சாம்பிராணி புகை போடும் தட்டுடன் 40 வயதுடைய போலி மந்திரவாதி ஒருவர் வந்துள்ளார்.
“இந்த வீட்டில் பில்லி சூன்யம் வைக்கப்பட்டுள்ளது. இதை எடுக்கவில்லை என்றால் இந்த வீட்டில் உள்ள புதுமணப் பெண்ணின் மாங்கல்யம் நிலைக்காது” என்று அவர் கூறியுள்ளார். இதனால் பயந்துபோன ரிகானா பேகம், தோஷத்தை நீக்க வழி கேட்டுள்ளார். அதற்கு, “உங்கள் கழுத்தில் கிடக்கும் நகையை கழற்றி கொடுங்கள். அதை வைத்து ஒரு பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரிகானா பேகமும் தனது கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் நகையை கழற்றிக் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட அந்த ஆசாமி, நகையுடன் ஒரு எலுமிச்சை பழத்தை சேர்த்து ஒரு வெள்ளைத் துணியில் பொதிந்து குட்டி கலசம் ஒன்றில் வைத்து மூடியுள்ளார். பின்னர், அதற்கு பூஜை செய்து ரூ.300 பெற்றுக் கொண்டார். பின்னர், அந்த கலசத்தை ரிகானா பேகத்திடம் கொடுத்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு திறந்து பாருங்கள், தோஷம் நீங்கிவிடும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு கலசத்தை திறந்து பார்த்தபோது, அதில் நகைக்கு பதில் கல் இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரிகானா பேகம், ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து, நகையை திருடிச் சென்ற போலி மந்திரவாதியை தேடி வருகின்றனர்.