நடிகர் சூரியின் சகோதரர் இல்லத் திருமணத்தில் 10 பவுன் நகை திருடியதாக பரமக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என் பவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை ராஜாக்கூரைச் சேர்ந்தவர் நடிகர் சூரி. இவரது சகோதரர் இல்லத் திருமணம் செப்.9-ம் தேதி சிந்தாமணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள், திரையுலகத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மணமகள் அறையில் வைத்திருந்த சுமார் 10 பவுன் நகைகள் மாயமானது. இது குறித்து நடிகர் சூரி சகோதரரின் மேலாளர் சூரிய பிரகாஷ் கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு ஆய்வாளர் கணே சன் வழக்குப் பதிவு செய்தார். தனிப் படை போலீஸார் விசாரணை செய்தனர்.
திருமண விழா நிகழ்ச்சிகளைப் பதிவு செய்த வீடியோக்கள், மண்டபத்தில் உள்ள சிசி டிவிக்களை ஆய்வு செய்தனர். அப்போது திருமண நிகழ்ச்சியில் சந்தேகப்படும் வகையில் இளைஞர் ஒருவர் சுற்றித் திரிவது ‘ட்ரோன்’ கேமரா பதிவுக் காட்சியில் தெரிய வந்தது.
இதை அடிப்படையாக வைத்து தனிப்படை போலீஸார் விசாரித்தனர். வீடியோ காட்சியில் இடம் பெற்றிருப்பவர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிய வந்தது. அவர் 10 பவுன் நகையை திருடியிருக்கலாம் எனக் கருதினர். இதைத் தொடர்ந்து பரமக்குடிக்கு சென்ற தனிப் படையினர் விக்னேஷைப் பிடித்தனர்.
விசாரணையில், திருமண விழாவில் நகைகளை அவர் திருடியது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை கீரைத்துறை போலீஸார் மீட்டனர்.
இவர் மதுரை, சிவ கங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசியல், சினிமா, தொழிலதிபர்கள், அதிகாரிகள் ஆகிய முக்கிய பிரமுகர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு உறவினர் போன்று டிப்-டாப்பான உடையில் சென்று திருடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து விக்னேஷ்(30) நேற்று கைது செய்யப்பட்டார். இவர் மீது 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகப் போலீஸார் தெரிவித்தனர்.