தமிழகம்

வாக்காளர் பெயர் நீக்கல் பட்டியலில் 63 ஆயிரம் பேர்: பொதுமக்கள் பார்வையிட வசதி

செய்திப்பிரிவு

சென்னையில் வாக்காளர் பெயர் நீக்கல் பட்டயலில் 63 ஆயிரத்து 970 பேர் இடம்பெற்றுள்ளனர். அப்பட்டியல்களை பொதுமக்கள் பார்வைக்காக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று (வியாழக்கிழமை) வைக்கப்பட்டன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் செம்மைப் படுத்தும் பணியின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் இரு முறை இடம்பெற்ற பெயர்கள், இறந்தோர் பெயர்கள் அடங்கிய பட்டியல், வாக்குச்சாவடி வாரியாக தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியல்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அப்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு நகல்கள் வழங்கப்பட்டது. பட்டியலில் இடம்பெற்றுள்ள நீக்கப்பட இருப்போர் பெயர்கள் குறித்து ஆட்சேபனை இருப்பின், சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் முறையிடலாம்.

இந்த பட்டியலில் 63 ஆயிரத்து 970 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியல்கள், 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய மண்டல அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகளில் இடம்பெற்றுள்ளன. மேலும் >www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இன்று, அப்பட்டியல் குடியிருப்போர் நலச் சங்கங்களில் வாசிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT