தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் ரூ.7.74 கோடி செலவில் வருவாய்த்துறைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை திறந்து வைத்தார்.
இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியே 48 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வட்டாட்சியர், குடிமைப் பொருள் வழங்கல், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் மற்றும் கோட்ட கலால் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு இருக்கை வசதிகளுடன் கூடிய பார்வையாளர் அறை, குடிநீர் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள மேடை போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.2 கோடியே 60 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல மதுரை மாவட்டத் தில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் சமயநல்லூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளருக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகம், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.36 லட்சத்தில் கொளத்தூர், சோழபுரம் மற்றும் கயத்தாறு ஆகிய குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகங் கள், நெல்லை மாவட்டத்தில் ரூ.61 லட்சத்து 71 ஆயிரத்தில் துணை ஆட்சியர்களுக்கான நான்கு குடியிருப்புகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 25 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அலுவலகங்கள், வேலூர் மாவட்டத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் அம்மூர்-I, அம்மூர் II, பள்ளிகொண்டா மற்றும் கணியம்பாடி ஆகிய 4 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அலுவலகங்கள், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.13 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் பேரையாம்பட்டி மற்றும் இ-குமாரலிங்கபுரம் ஆகிய 2 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.
மொத்தம் ரூ.7 கோடியே 74 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டிலான இந்தப் புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய்த்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர் பிரதீப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.