மதுரை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கார் ‘பார்க்கிங்'கில் 21 மணி நேரத்துக்கு ரூ. 500 கட்டணம் வசூ லிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னைக்கு அடுத்து தென் தமிழகத்தில் பெரிய ரயில் நிலை யமாக மதுரை ரயில் நிலையம் செயல்படுகிறது. கேரளா மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருவதால் மதுரை ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.
மேம்படுத்தப்பட்ட மதுரை ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பய ணிகள் தங்கும் அறை மற்றும் நடைமேடைகளைப் பயன்படுத்த குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் கார் பார்க்கிங்குக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் காரை நிறுத்த விமான நிலையம் போல அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் கடும் கண்டனம் தெரி விக்கின்றனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: மதுரை ரயில் நிலைய பார்க்கிங்கில் காரை நிறுத்த 21 மணி நேரத்துக்கு ரூ. 500 கட்டணம் வசூலிக்கின்றனர். இது ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிந்தே நடக்கிறதா அல்லது காப்பக ஒப்பந்ததாரர்கள் அடாவடியாக வசூலிக்கிறார்களா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுபற்றி கேட்டால் ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத் தையே வசூலிப்பதாக அவர்கள் கூறுகின்றனர் என்றனர்.
இதுகுறித்து ரயில்வே வர்த்தகப் பிரிவு மேலாளர் வி.பிரசன்னா கூறியதாவது: மதுரை ரயில்நிலைய வளாகத்தில் உள்ள கார் பார்க்கிங் கட்டணமாக முதல் 3 மணி நேரத்துக்கு ரூ.30, அடுத்த 3 மணி நேரத்துக்கு ரூ.50 மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ரூ.75 என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படிதான் கட்டணம் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பில்லை.
கார் வைத்திருப்பவர்கள் அவர்களின் வசதிக்காக ரயில் நிலையம் வருகின்றனர். காலியிடம் என்பதால் ரயில் நிலைய பகுதியில் நிறுத்தி இடையூறு செய்யக்கூடாது என்ற நோக்கிலும், வாகனங்களை பாதுகாக்கும் எண்ணத்திலும் கட் டணம் வசூலிக்கப்படுகிறது.
இதன்மூலம் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஆதாரப் பூர்வமாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு அவர் கூறினார்.