பொறியியல் கலந்தாய்வுக்குத் தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதால், மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த கே.எம்.கார்த்திக், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 2020-ல் தனியார் கல்லூரிகள், பள்ளிகள் 40 சதவீதக் கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலித்த போதிலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை.
தமிழகம் முழுவதும் தனியார், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை.
எனவே தமிழகத்தில் உள்ள தனியார், சுயநிதி பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா காலத்தில் முறையாக ஊதியம் வழங்குவதை உறுதி செய்யவும், அதுவரை பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் விசாரித்து, ’’மனுதாரர் புகார் தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. இந்த மனு கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.
இதையடுத்து, மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.